இடம் விற்பவருக்கு பத்து கண்கள் என்றால், இடம் வாங்குபவருக்கு ஆயிரம் கண்கள் இருக்க வேண்டும். ஒரு இடம் வாங்க பத்திரப் பதிவுக்கு முன்பு அறிந்துக்கொள்ள வேண்டியவைகளை சில உள்ளன.
இடம் வாங்கும் போது முதலில் வில்லங்க பத்திரத்தை பார்க்க வேண்டும். பொதுவாகவே 30 ஆண்டு கால பத்திர விபரங்களை சார் பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, சட்ட ஆலோசகர் மூலம் சரிபார்த்து எந்த வில்லங்கமும் இல்லயெனில் அடுத்த படிக்கு போகலாம். குறிப்பிட்ட இடம் அரசு அங்கீரம் பெற்றுள்ளதா, வரி முறையாக செலுத்தப்பட்டுள்ளதா? என ஊரின் உள்ளாட்சி அலுவலகத்துக்கு சென்று தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இடத்தின் ஒரிஜினல் பத்திரம் மற்றும் மூல பத்திரங்களை கண்டிப்பாக படித்துப் பார்க்க வேண்டும். பத்திரத்தின் உரிமையாளர் தான் உங்களிடம் இடம் விற்பனை செய்யும் நபரா என உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இடம் தொடர்பாக பவர் வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுள்ளதா என்பதும் வரைபடம் பெறுவதும் முக்கியம்.
சொத்துவரி மற்றும் கணிப்பொறி சிட்டாவில் மனையை விற்பவர் பெயர் அல்லது விற்கும் நிறுவனத்தின் பெயர் இருக்க வேண்டும். விற்பவரின் அடையாளத்தை சரிபார்க்க அவரின் வாக்காளர் அடையாள அட்டை வாங்கி சரி பார்க்கலாம்.
லே அவுட் மேப்பை கட்டாயம் பார்க்க வேண்டும். அரசாங்க அனுமதியோடு ஸ்கூல், நீச்சல் குளம், விளையாட்டு திடல் எல்லாம் எங்கு அரசு குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அங்கு இவர்கள் லே அவுட்டில் குறிப்பிட்டிருக்கிறார்களா என்பதை சரிபார்க்க வேண்டும். இடத்தை விற்பவரின் ரத்த சொந்தகளுக்கு உரிமை இருப்பின், அவர்களிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். ஒரு இடத்துக்கு அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் விலை தெரிந்துக் கொள்ள வேண்டும். இதை பதிவாளர் அலுவலகத்திலோ இணையதளம் மூலமாகவோ தெரிந்துக் கொள்ளலாம். அக்ரிமென்ட் போடும் பட்சத்தில் அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது நல்லது. எல்லாவற்றுக்கும் தரகரையே முன்னிறுத்தாமல் விலை உள்ளிட்ட விஷயங்களை விற்பனையாளரிடம் நேரடியாக பேசுவது நல்லது.