தமிழ்நாடு வீட்டு வாடகை சட்டம்
வீடு வாடகைக்கு விடுவதில் அல்லது வாடகைக்கு தங்குவதில் இரண்டுமே எக்கச்சக்க பிரச்சனைகளை கொண்டது. இந்த வீட்டு பிரச்னைகளை களைவது சிவில் கோர்ட்தான்! நிலத்தின் மதிப்பு உயரவே வீட்டு வாடகையும் உயர்ந்துவிட்டது. அதனால் அனைத்து தரப்பு மக்களுக்கும் அவதி தான்!

பல்வேறு வேலை செய்யும் பேச்சிலர்ஸ் குழுவாக வீடு வாடகைக்கு எடுக்கும் போது, இருபதாயிரம் ரூபாய் கூட சாதாரண வீட்டுக்கு தர முடியும். ஆனால், ஒரு குடும்பஸ்தனால் தர இயலுமா? இந்த அடிப்படையில் தான் வீட்டு ஓனருக்கும், தங்ககும் நபர்களுக்கும் போர் நடக்கிறது.

இதற்கு புரோக்கர்களும் முக்கிய காரணம். சரி அதையெல்லாம் விடுவோம். இதற்கு சட்டம் என்ன சொல்கிறது? 1960 ஆம் ஆண்டே வீட்டு வாடகை கட்டுப்பாட்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 1964 ஆம் ஆண்டு வாடகை கட்டுப்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு பகுதிக்கும் வாடகை குறித்த பல்வேறு விதிகள் அமைக்கப்பட்டது. சதுர அடிக்கு இந்த இடத்தில் இவ்வளவு தான் மதிப்பு என வகுக்கப்பட்டது.

இந்த சட்டத்தில் சிலதிருத்தங்களும் கொண்டு வரப்பட்டது. 1973 ஆம் ஆண்டு சென்னை மாவட்டத்திற்கு கலெக்டரே வாடகை கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மற்ற மாவட்டத்திற்கு மண்டல வருவாய் அதிகாரிககள நியமிக்கப்பட்டனர். வாடகை, முன்பணம், வாடகை வசூலித்தால் ரசீது என எல்லாம் அரசு பார்த்து நியமிப்பது தான்!

பொதுமக்கள் உரிமையியல் நீதி மன்றங்களை, வாடகை பிரச்னைகளுக்கு அணுகும் போது, 1960ம் ஆண்டு வீட்டு வாடகை கட்டுப்பாட்டு சட்டம் நம்மை பாதுகாக்கும். இதை தனி ஒரு ஆளாக இல்லாமல் சமூக ஆர்வலர்கள் ஒன்றிணைந்து செய்யும்போது நிலத்தின் மதிப்பு வாடகையின் மதிப்பு குறையும்.

வீட்டு உரிமையாளருக்கான பிரச்னை இது!

""""ஒருவர் பத்து வருடங்களாக குடியிருக்கிறார். அவரை என்னுடைய தேவைக்காக காலி செய்ய சொன்னேன். அவர் உடனே கோர்ட்டுக்கு போய், ‘ஸ்டே இன்ஜெக்ஷன் ஆர்டர்’ என ஒன்றை அனுப்பிவிட்டார். அத்தோடு நில்லாமல், ‘மூன்று லட்ச ரூபாய் பணம் கொடுத்தால் தான் காலி செய்வேன்!’ என மிரட்டுகிறார். உச்சநீதிமன்ற வரையிலும் இதற்காக செல்வதாக கூறுகிறார். நான் என்ன செய்ய?’’ இது வீட்டு உரிமையாளரின் பிரச்னைகளில் ஒன்று.

இதற்கு சட்டம் சொல்வது இதுதான்;

வீட்டு வாடகைக்கு விடும்போது எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் முக்கியம். முன்பணமாக பத்துமாத வாடகையை பெறலாம். வாடகைக்கு விடும் தேதி, உள்ளிட்ட விபரங்களுடன் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் இரு தரப்பினரமே கையொப்பமிட வேண்டும். ஆளுக்கு ஒரு பிரதி இருவர் கையிலும் இருக்கட்டும். இது வழக்கு தொடுக்கும் பட்சத்தில் இருவருக்குமே உகந்ததாக இருக்கும். ஆனால், பெரும்பாலும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் நடக்கின்றன.

ஒரு வாடகைதாரரை வெளியேற்ற தகுந்த காரணங்கள் தேவை. ஒருவர் மூன்று மாதங்களாக வாடகை கொடுக்காத பட்சத்தில் அதை காரணம் காட்டி காலி செய்யலாம். வாடகைக்கு விட்டிருக்கும் இந்த வீட்டை தவிர வேறு இடம் இல்லை என்கிற பட்சத்திலோ, வீட்டு லோன் அடைக்க முடியாமல் திணறும் பட்சத்திலோ, இடித்து கட்ட நடவடிக்கை எடுக்க நினைக்கும் பட்சத்திலோ, காலி செய்ய உத்தரவிடலாம். இது வலுவான காரணங்களும் கூட!

மற்றபடி சட்டத்துக்கு புறம்பாக ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என காலி செய்ய சொல்ல இயலாது. அவ்வாறு வீட்டு உரிமையாளர் செய்தால், வீட்டு வாடகைதாரர் தக்க ஆதாரங்களுடன் நீதிமன்றத்தை நாடலாம். தடை உத்தரவும் வாங்கலாம். இந்த தடைக்கு இன்ஜெக்ஷன் ஆர்டர் (Injunction order) எனப் பெயர்.

‘இன்ஜெக்ன்ஷன் ஆர்டர்’ என்பது நடக்கப்போகிற விஷயத்தை நிறுத்துவது. ஸ்டே என்பது நடந்துக் கொண்டிருக்கும் விஷயங்களை தொடராமல் நிறுத்தி வைப்பது.

இன்ஜெக்ன்ஷன் ஆர்டர் தாங்கள் பெற்றிருக்கும் பட்சத்தில், கோர்ட்டுக்கு சென்று தகுந்த பதில் சொல்லி அந்த ஆர்டரை இடைக்காலமாக நீக்க முடியும். ஆனால், இதந்கு காலதாமதம் தவிர்க்க இயலாதது. அதேப்போல குடியிருக்க கேட்டு விட்டு அலுவலகம் வைத்துக் கொள்வது போன்ற இன்ன பிற பிரச்னைகளுக்கு அக்ரிமென்ட் தான் சரியான தீர்வு. அதில் தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.